திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோபால்பட்டி அருகே உள்ள கொரசினம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பத்மநாபன் (வயது 18), ஆண்டிச்சாமி மகன் அலெக்ஸ் (வயது 17). இவர்கள் இருவரும் வேம்பார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் கொரசினம்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோபால்பட்டி சென்று 1 லிட்டர் பிளாஸ்டிக்கேனில் பெட்ரோல் வாங்கி விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரு சக்கர வாகனத்தை பத்மநாபன் ஓட்டி வந்துள்ளார். அலெக்ஸ் பின்னால் அமர்ந்து கொண்டு பெட்ரோல் கேனை கையில் பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் நத்தம் சாலையில் கணவாய்பட்டி பங்களா அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த(கணவாய்பட்டி பங்களா)திருப்பதி மகன் நிபிலேஷ் (வயது 10) என்ற சிறுவன் சாலையின் குறுக்கே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பைக் கீழே சரிந்து விபத்துக்குள்ளானதில் உராய்வு ஏற்பட்டு பெட்ரோல் கேணில் தீப்பற்றியது.

தீ இரு சக்கர வாகனம் மற்றும் அதில் அமர்ந்திருந்த பத்மநாபன், அலெக்ஸ் ஆகியோர் உடலின் மீதும் தீப்பற்றிக் கொண்டது. இதில் இருவரும் தீக்காயம் அடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் லேசான காயமடைந்த சிறுவனும் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளான்.
இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் 2 சிறுவர்கள் உடலின் மீது தீ பிடித்தது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.




