• Fri. Apr 19th, 2024

மத்திய அமைச்சரிடம் பணம் கேட்டு மிரட்டல் – 5 பேர் கைது!

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது பாஜகவைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார், விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதை அடுத்து விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரித்து சிறப்பு விசாரணைக் குழு, லக்கிம்பூர் கேரி சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என அறிக்கை அளித்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவரது உதவியாளரிடம் பணம் கேட்டு மொபைல் போன் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நொய்டாவை சேர்ந்த 4 பேர் மற்றும் டெல்லியை சேர்ந்த ஒருவர் என 5 பேரை பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *