தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹெல்டர் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹெல்டர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த அறிக்கை கேட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் சிறப்பான முறையில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் உள்ளன. அதை தீர்க்கவே நாங்கள் நேரடியாக கள ஆய்வு செய்து வருகிறோம். இதற்கு அதிகாரிகள் தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.
மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எத்தனை பேருக்கு பட்டா அளிக்க உள்ளோம் என்பதை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே கூற முடியும் என்றார்.
மேலும் அவர், மத்திய அரசு பல திட்டங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் அத்திட்டங்களுக்கான பலனை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. அதனை களைந்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.