திண்டுக்கல் திரையரங்கில் நோய் இலவசமாக வழங்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் செயல்பட்டு வரும் உமா ராஜேந்திரா திரையரங்கில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள கருப்பு படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. கோடைகால விடுமுறை என்பதால் படம் வெளியானது முதல் தற்போது வரை திரையரங்கம் முழுவதும் கூட்டம் அலைமோதி வருகிறது.

ராஜேந்திரா மற்றும் உமா திரையரங்கில் இரண்டு திரையரங்கிலும் கருப்பு படம் வெளியாகி உள்ளது. தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் சராசரியாக ஒரு காட்சிக்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தியேட்டருக்கு படம் பார்க்க வருகின்றனர். திரையரங்கிற்கு வருபவர்கள் தங்களது பணத்தை செலுத்தி படம் பார்க்க வருகின்றனர். ஆனால் திரையரங்கில் சுகாதாரம் என்றால் அது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அந்த வகையில் உமா திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்கள் இடைவேளையின் போது தின்பண்டங்கள் வாங்குவதும், குளிர்பானம் வாங்குவதும் வாடிக்கையாக உள்ளது.
அதேபோல் ஒவ்வொருவரும் இடைவேளையின் போது சிறுநீர் கழிக்க செல்வது வழக்கம். அந்த வகையில் வியாழக்கிழமை இரவு படம் பார்க்க வந்தவர்கள் முகம் சுளிக்கும் வகையில் சுகாதாரமற்ற முறையில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் சிறுநீர் செல்லாமல் அப்படியே தேங்கி நின்று மற்றவர்கள் மேல் தெறிக்கும் அளவிற்கு மிகவும் ஒரு கேவலமான விஷயமாக இருந்தது. அதேபோல கழிப்பறை முற்றிலும் சுத்தமாக இல்லை என வந்தவர்கள் ஒவ்வொருவரும் புலம்பிக் கொண்டே சென்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து திரையரங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என படம் பார்க்க வந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அதிக பணம் செலுத்தி இடைவேளையின் போது உணவு தின்பண்டங்கள் குளிர்பானங்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். அதிலும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளதா என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





