• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

போராட்டக் களமாக மாறிய திருப்பரங்குன்றம்..,

ByKalamegam Viswanathan

Nov 25, 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியிருந்த நிலையில், இன்று மாலை மலை தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 20ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதனால் இன்று மாலை தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் இன்று அவசர வழக்கு விசாரணை நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும், மதுரை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு பக்தர்களின் மத உரிமையைப் பாதிப்பதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

விசாரணையின்போது, கோவிலில் வழிபாடு நடத்துவதற்கோ, பக்தர்கள் செல்வதற்கோ எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும், பக்தர்களின் மத உரிமையைப் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் ஏற்படக்கூடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

இந்த நிலையில், இன்று மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றபோது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வில்லை. மாறாக, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள தூணில் மட்டுமே மகா தீபம் ஏற்றப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த பக்தர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி போராட்டக் களமாக மாறியது.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மலைப்பகுதிக்குச் செல்லும் வழிகளில் பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நடமாட்டத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ள நிலையில், மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் அடுத்தகட்டமாக சட்டரீதியான நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் உச்ச நீதிமன்ற உத்தரவை எந்த வகையில் நடைமுறைப்படுத்தியது, தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கான காரணம் என்ன, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களின் ஆன்மிக நிகழ்வாக நடைபெற வேண்டிய நிலையில், நீதிமன்ற உத்தரவு, அரசின் நடவடிக்கை, 144 தடை உத்தரவு மற்றும் பக்தர்களின் எதிர்ப்பு என திருப்பரங்குன்றம் தற்போது பெரும் பரபரப்பின் மையமாக மாறியுள்ளது.

மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே தற்போது தமிழக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.