• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா

ByKalamegam Viswanathan

Apr 2, 2025

திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு, வரும் ஏழாம் தேதி முதல் மூலஸ்தானம் பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் அறிவுரைப்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சட்டமன்றத்தில் அறிவித்தவாறும், ஆனி 30 ஆம் நாள் ஜூலை 14 ஆம் தேதி திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது.

கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கோயில் இராஜகோபுரம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருக்கோயில் மூலஸ்தானத்தில் உள்ள தாய்பாறையில் செதுக்கப்பட்டுள்ள மூல விக்கிரகங்களுக்கு. கல்கம் அதாவது கடுசக்கரை சாத்தும்பணி, மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மராமத்து பணி மற்றும் திருப்பணிகள் நடைபெற உள்ளது.

மேற்படி, திருப்பணிகள் செய்ய ஏதுவாக, பங்குனி மாதம் 26 ஆம் நாள் ஏப்ரல் 9 ஆம் தேதி மூலாலய பாலஸ்தாபனம் செய்யப்படவுள்ளது. மூலாலய பாலஸ்தாபனத்தை முன்னிட்டு திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம். சண்முகர் சண்முகர் சன்னதி ஆகிய மண்டபகங்களிலுள்ள உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் கலாகர்ஷணம் செய்யப்பட்டு, சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிக மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு அனைத்து தெய்வங்களின் தாருபிம்பத்திற்கு (மூலவர் அத்தி மரச்சிற்பங்கள்) மூலஸ்தானத்தில் நடைபெறுவது போல் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் வழக்கம் போல், ஆகம விதிப்படி நடைபெறும் என இத்திருக்கோயில் ஸ்தானிகபட்டர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மூலஸ்தான பாலாலயத்தை முன்னிட்டு வருகின்ற வரும் 7 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் பாலாலய யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு ஜூலை 14-ஆம் தேதி திருக்குடமுழுக்கு பணிகள் முடியும் வரை திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய இடங்களில் மராமத்து மற்றும் திருப்பணிகள் நடைபெற உள்ளதால், திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு ஏதுவாக சண்முகர் சன்னதி தற்காலிக மூலஸ்தானம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பாலாலயம் செய்யப்பட்டு கலாகர்ஷணம் செய்யப்பட்ட மூல விக்கிரகங்களின் தாருபிம்பங்கள் (மூலவர் அத்தி மரச்சிற்பங்கள்) மூலவராக பாவிக்கப்பட்டு தினந்தோறும் மூலஸ்தானத்தில் நடைபெறுவது போல் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் வழக்கம் போல் ஆகம் விதிப்படி நடைபெற உள்ளது.

எனவே, பக்தர்கள் சண்முகர் சன்னதியில் உள்ள மூலஸ்தானத்தில் வழிபாடுசெய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. திருப்பணிகள் நடைபெறுவதற்கு ஏதுவாக இதற்கு முன்னர் நடைபெற்ற குடமுழுக்கு திருப்பணிகளிலும் இதே போன்ற நடைமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கடைபிடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.