மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் தற்காலிகமாக தனியார் மகாலில் செயல்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலராக பொற்செல்வி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த சோழவந்தான் பகுதியை சேர்ந்த பிரபல நாளிதழின் செய்தியாளர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இது பற்றி கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிப்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு உட்பட்ட மேலக்கால் காடுபட்டி திருவேடகம் மன்னாடிமங்கலம் குருவித்துறை முள்ளிப்பள்ளம் தென்கரை கருப்பட்டி நாச்சிகுளம் இரும்பாடி ரிஷபம் திருவாளவாயநல்லூர் நெடுங்குளம் உள்ளிட்ட ஊராட்சி அலுவலகங்கள் மூலம் ஊராட்சி சார்பில் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ஊராட்சி நிர்வாகம் அதற்கான பின் தொகையை தற்போது வரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளான செய்தியாளர் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வியை கண்டித்து கண்டன பதாதைகளை ஏந்தி யூனியன் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து யூனியன் அலுவலகத்திற்கு வந்த சோழவந்தான் காவல்துறையினர் செய்தியாளரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி விரைவில் பில் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றார்.
வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் சார்பில் கூறப்படும் நிலையில் தற்போது செய்தியாளர் ஒருவரே வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார் அளித்து தர்ணாவில் ஈடுபடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.






