• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் இல்லை – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி…

BySeenu

Aug 30, 2024

கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்..,

ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ள பொது மருத்துவ அவசர அறிவிப்பில், குரங்கு அம்மை நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாட்டில் துவங்கிய இந்த பாதிப்பு உலகம் முழுவதும் தற்போது 123 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணித்து அவர்களுக்கு குரங்கம்மை பாதிப்புக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் இதற்கென தனி வார்டு உருவாக்கப்பட்டு அதில் மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்தோடு, mass fever screening என்கிற முறையில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மட்டும் இன்றி தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களிலும் கப்பல் வழியே வரும் பயணிகளுக்கு குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து விமான நிலையங்களில் குரங்கமை நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டு நோய்க்கான அறிகுறிகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

குரங்கம்மை நோய் பாதிப்பு என்பது தொற்றுநோய் என்பதால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் இதற்கான பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளா உட்பட இந்தியாவில் இதுவரை குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை. இருந்தாலும் தமிழக கேரள எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பினை செய்து வருகிறோம்.

முதல்வர் மருந்தகத் திட்டம் வரும் பொங்கல் தினத்தன்று துவங்கி வைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். எந்தெந்த இடங்களில் இந்த மருந்தகங்களை அமைக்கலாம், என்னென்ன மருந்துகள் அடிப்படையாக தேவைப்படுகிறது என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு இதேபோல் மலிவு விலை மருந்தகங்களை நடத்தி வருகிறது. இவை மருந்துக்காக செய்யும் செலவினை கட்டாயம் குறைக்க உதவும்.

மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்களில் கூட சில மணி நேரங்களில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டுள்ளது’ என தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உரிய அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவ மருத்துவமனையில் அவ்வப்போது ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறார் எனவும் கூறினார்.

கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில், அது செயல்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.