மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு, தொடர் ஜோதி ஓட்டத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், மதுரையில் அதிமுக நடத்த உள்ள மாநாட்டுக்கு தடைகோரி உயர் நீதிமன்றக் கிளையில் சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விமான நிலையத்தின் அருகில் மாநாடு நடக்க உள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு மாநாடு நடத்த விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மக்கள் அதிகமாக வருவதால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த மாநாட்டிற்கு அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், சுந்தர் மற்றும் பாரத சக்கரவர்த்தி கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மாநாடு குறித்து நான்கு மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்து விட்டனர்? கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு முடியும்? என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மதுரை மாநாட்டில் வெடிப்பொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என்று அதிமுக தரப்பு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.