கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமி தெய்வானை வள்ளி தெப்பத் திருநாள் நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவின் இறுதியாக சுப்ரமணியசாமி வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில் சமேதராக எழுந்தருளி தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலிப்பரா. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். தைப்பூச திருநாள் கொண்டாடப்படுவதற்கு தமிழர்களின் வானியல் அறிவும் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. பூசம் என்பது வானில் இருக்கும் ஒரு நட்சத்திர கூட்டம். தைப்பூசத்தன்று சூரியன் மகர ராசியிலும் சந்திரன் பூசநட்சத்திரத்தில் கடக ராசியில் வடக்கும் சஞ்சரிக்கும். இந்த நாளை சிறப்பான நாளாக உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் இந்த தைப்பூச திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பலவிதமான நேர்த்திக்கடன்களை பய பக்தியுடன் செலுத்தினர்.
தெப்பத்திருவிழாவையொட்டி சுப்ரமணியசாமி தெய்வானை வள்ளிக்கு பால், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் போன்ற பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. நகைகள், பட்டாடைகள், வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருளி உலா வந்தார். தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தது. அப்போது வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.