• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேனி: வேலுநாச்சியார் ஊர்திக்கு ‘வரவேற்பு’

ஆங்கிலேயர்களை துச்சமாக மதித்து போரில் ‘வாகை’ சூடிய சிவகங்கை சீமையை ஆண்ட ராணி ‘வீரமங்கை’ வேலுநாச்சியாரின் பெருமையையும், தியாகத்தையும் தேனி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ‘கம்பீர’ தோற்றத்துடன் மாவட்டத்திற்கு வருகை தந்த, அலங்கார அணிவகுப்பு ஊர்திக்கு, கலெக்டர் முரளீதரன் மலர் தூவி வரவேற்றார்.

சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்து போரிட்ட, தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் 3 அலங்கார ஊர்திகள் திறம்பட வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்றன. அவைகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. அவற்றில் ஒன்றான சிவகங்கை சீமையை ஆண்ட ராணி ‘வீரமங்கை’ வேலுநாச்சியாரின் வீர, தீர சாகசங்கள் மற்றும் தியாகங்களை பொதுமக்கள், இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், இந்த அலங்கார அணிவகுப்பு ஊர்தி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மக்கள் பார்வைக்காக அனுப்பப்படும் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பல நகரங்களில் ‘கம்பீரமாக’ வலம் வந்த இந்த வேலுநாச்சியாரின் ஊர்தி, நேற்று (பிப்.,7) விருதுநகர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு திருமங்கலம் வழியாக செம்பட்டிக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து திரும்பி வத்தலக்குண்டு வழியாக பல பட்டி, தொட்டி கிராமங்களை கடந்து இன்று (பிப்.,8) காலை 7 மணியளவில் தேனி மாவட்டத்திற்கு வந்தடைந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த தேனி பங்களாமேடு பகுதியில் இந்த ஊர்தி மக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. மங்கள இசை முழங்க, மாவட்ட கலெக்டர் முரளீதரன் மலர்தூவி வரவேற்றார். தொடர்ந்து, எஸ்.பி., பிரவின் உமேஷ் டோங்கரே, சப் – கலெக்டர் ரிஷப், டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம் உட்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஊர்தியை கண்டு ரசித்தனர். வீரத்திற்கு ‘பெயர் போன’ வீரமங்கை வேலு நாச்சியாரின் இந்த அலங்கார ஊர்தி அருகே நின்று ‘பலரும்’ ஆர்வமுடன் புகைப்படம் எடுத்ததை காணமுடிந்தது. கலை பண்பாட்டு துறை சார்பில் நாதஸ்வரம், கரகாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.