முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரரின் சொகுசு காரை, இரவு நேரத்தில் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். பணம் எதுவும் சிக்காததால், காரை விடுவித்தனர். பெரியகுளத்தில் நடந்த இச்சம்பவம் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அ.தி.மு.க., வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க., சார்பில் 24 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சகோதரர் சுந்தர் (எ) சண்முக சுந்தரம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் செந்தில் களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் பெரியகுளம் அக்ரஹார தெரு அருகில் ஓ.பி.எஸ்., சகோதரர், ஓ.ராஜா மகனுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று, அங்குமிங்கும் சுற்றித் திரிவதாக தி.மு.க., விசுவாசிகள் சிலருக்கு செய்தி பரவியுள்ளது. இதுதான் சமயம் என சுதாரித்துக் கொண்ட அவர்கள் உடனே வடகரை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சொகுசு காரை வழிமறித்து, தடுத்து நிறுத்தினர். பின்னர் கார் டிரைவரை கீழே இறங்கச் செய்து, சீட்டின் முன், பின்புற பகுதியை சோதனை செய்தனர். அப்போது, உள்ளே இருந்த அட்டை பெட்டிகளை வெளியே எடுத்து, திறந்தபோது 20க்கும் மேற்பட்ட கட்சி வேஷ்டி, சேலைகள் இருந்துள்ளன. பணம் எதுவும், சிக்காத நிலையில், காரை போலீசார் விடுவிடுக்கும் நோக்கத்தில் இருந்தனர். அப்போது அங்கு ஆதரவாளர்கள் புடைசூழ வந்த தி.மு.க., வேட்பாளர் செந்தில் காரை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கார் வடகரை ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வேஷ்டி, சேலை வாங்கியதற்கான உரிய ‘பில்’ ஆதாரமாக காண்பிக்கப்பட்டதால், விசாரணைக்கு பிறகு போலீசார் காரை விடுவித்தனர். இச்சம்பவம் காட்டுத் தீ போல் பரவியதைடுத்து, ஓ.பி.எஸ்., உள்ளிட்ட ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

