• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தோழி போல் நடித்து நகைகளைக் கொள்ளையடித்த இளம்பெண்..!

Byவிஷா

Jan 3, 2024

புதுச்சேரியில் தோழி போல் நடித்து இளம்பெண் ஒருவர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நகராட்சிக்குச் சொந்தமான பொது கழிப்பறையில், பராமரிப்பு பணி செய்து வருபவர் ராஜேஸ்வரி. 52 வயதாகும் இவருக்கு திண்டிவனத்தைச் சேர்ந்த வளர்மதியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி நெருங்கிய தோழிகளாகி விட்டனர். டிசம்பர் 26 ம் தேதி வளர்மதி, தனது தாயார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தான் தங்குவதற்கு இடம் இல்லை என ராஜேஸ்வரியிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார்.
ராஜேஸ்வரி உடனே இரக்கப்பட்டு தன்னுடைய வீட்டில் வளர்மதி, தங்குவதற்கு இடம் கொடுத்தார். டிசம்பர் 28ம் தேதி ராஜேஸ்வரி ஒரு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகப் பீரோவில் வைத்திருந்த தனது நகைகளை எடுக்கச் சென்ற போது அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி, மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போய் இருந்தன. உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீசாரின் சந்தேகப் பார்வை வளர்மதியின் மீது விழுந்த நிலையில், வளர்மதியைப் பிடித்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் வளர்மதி, ராஜேஸ்வரியின் வீட்டில் இருந்து தங்க நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வளர்மதியிடம் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 2021ம் ஆண்டு புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மூதாட்டியின் வீட்டில் புகுந்து 12 சவரன் தங்க நகை திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.