தன் குடும்பத்திற்குள் நுழையும் சமூக விரோதிகளை நாயகன் வேட்டையாடும் கதையே
திருவின் குரல்
நடிகர் அருள்நிதி கேட்கும் திறன் குறைவாகவும், பேசும் திறன் இல்லாதவருமாக உள்ளார். அவருக்கு அப்பா பாரதிராஜா. தன் தங்கை மகளை அருள்நிதிக்கு சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார்கள்.மற்றொரு புறம் அரசு மருத்துவமனையில் சிறிய பொறுப்புகளில் பணியாற்றும் நான்குபேர் கற்பழிப்பு, கொலை, கொள்ளை என சமூக விரோதச் செயல்களை மிகக் கொடூரமாகச் செய்துவருகிறார்கள்.
இந்நிலையில் பாரதிராஜாவுக்கு ஒரு விபத்து நேர்கிறது. அவர் சமூக விரோதிகள் உள்ள அதே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.அந்த நால்வர் அணி பாரதிராஜா மகன் அருள்நிதியோடு ஒரு சந்தர்ப்பத்தில் மோதலைத் துவங்குகிறது.முடிவில் அருள்நிதி அவர்கள் கதையை எப்படி முடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக அருள்நிதி. தான் நடிக்கும் படங்களில் தன் கேரக்டரின் கணம் உணர்ந்து நடிப்பவர் அவர். இப்படத்திலும் அப்படியான சிறப்பு நடிப்பைக் கொடுத்துள்ளார். வாய் பேச முடியாத துன்பத்தை ஒரு பாடலில் அவர் வெளிப்படுத்தும் முகபாவங்கள் அருமை.நாயகியின் நடிப்புக்கு பெரிதாக தீனி இல்லை என்றாலும் அவர் நன்றாகவே நடித்துள்ளார்.படத்தில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நடிகர் வில்லனாக வரும் அந்த வயதானவர்தான். கண்கள் முழி என அந்த மனிதரின் முகத்தில் அத்தனை குரூரம். ஒரு குழந்தையைப் பார்த்து அவர் கத்தி எடுக்கும்போது நமக்கு நெஞ்செல்லாம் பதறுகிறது.அவரோடு வரும் மற்ற மூவரும் சரியான தேர்வு. அவர்களும் தங்கள் பங்கிற்குச் சிறப்பாக நடித்துள்ளனர். பாரதிராஜா தன் கேரக்டரை உள்வாங்கி நன்றாக நடித்துள்ளார்.சாம்.சி.எஸ் பின்னணி இசையில் பல இடங்களில் கோட்டை விட்டுள்ளார். பேமிலி செண்டிமெண்ட் காட்சிகளில் பின்னணி ஈர்த்த அளவில் மற்ற இடங்களில் ஈர்க்கவில்லை. காட்சிகள் தரும் தாக்கத்தை அதீத இரைச்சல் இசை கெடுத்து விடுகிறது.
ஒளிப்பதிவாளர் படத்தில் சுழன்று சுழன்று பணியாற்றியுள்ளார். பெரும்பாலான இரவுக் காட்சிகளில் நல்ல லைட்டிங் அமைத்து தரமான மேக்கிங்-ஐ கொடுத்துள்ளார்
எடிட்டிங்கும் படத்தில் ஷார்ப்பாக அமைந்துள்ளது.டெக்னிக்கலாகவும் நடிகர்களின் பங்களிப்புகளிலும் திருவின் குரல் உயர்ந்து ஒலிக்கிறது.ஆனால் படத்தின் கதையும் உள்ளடக்கமும், ஆபத்தானதாக இருக்கிறது.அரசு மருத்துவமனை என்பது ஏழைகளின் அடைக்கலம். சின்ன காய்ச்சலோ, பெரிய நோயோ எதுவாக இருந்தாலும் எளிய மக்கள் தஞ்சம் அடைவது அரசு மருத்துவமனையில்தான்.பெரும்பாலும் அரசு மருத்துவமனையின் அடிமட்ட ஊழியர்கள் கொஞ்சம் சிடுசிடுவென இருப்பார்கள்தான். ஆனால் அதற்காக எல்லோரும் கூட்டுச் சேர்ந்து இந்தப் படத்தில் காட்டப்படுவது போன்று கொடூரங்களைச் செய்வார்களா?
கொரோனா காலத்தில் நிறைய அரசு மருத்துவமனை ஊழியர்கள்தான் இறைத்தூதர்கள் போல கண்ணியத்தோடு மக்களை அணுகினார்கள்.இந்தப் படம் அரசு மருத்துவமனை பக்கமே வந்துவிடாதீர்கள் என்று எச்சரிப்பது போல பல காட்சிகளை கொண்டுள்ளது.
மேலும் திரைக்கதையிலும் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க லாஜிக் மிஸ்டேக்குகள்.
மேலும், இந்தப் படம் பேசும் விஷயங்கள் எல்லாமே விஷத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது.அருள்நிதியை ஹீரோவாக வைத்துக் கொண்டே அரசு மருத்துவமனை & ஊழியர்களை இப்படிச் சொல்கிறார்கள் என்றால் எதோ அரசியல் உள்குத்து இருக்கும் என்றே தோன்றுகிறது..
திருவின் குரல்- அறமற்ற செயல்..!