தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கோவை – சேலம் – தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு வண்டி மாலை 6 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 3.30 மணிக்கு தருமபுரி ரயில் நிலையத்திற்கு வரும்.
இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வரும் வழியில் 45 கிலோ மீட்டரில் வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்தன.இந்தக் கற்களில் ரயில் இன்ஜின் உரசியதில் இன்ஜின் மற்றும் அடுத்த இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் வனப் பகுதி என்பதால், இந்த பகுதிகளில் வரும் ரயில்கள் மெதுவாகவே வருவதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டனர். இதனால் சேலம் – பெங்களூர் மார்க்கத்தில் சுமார் 4 மணி நேரமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர் மழையால் இந்த கற்கள் சரிந்து விழுந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் சதி வேலையா என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.