கோவையில் பழைய பொருட்களை வாங்குவது போல குட்டி யானை வாகனத்தில் வந்து, வீட்டின் முன் நின்று இருந்த சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று காலை சுமார் 11:55 மணி அளவில், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நல்ல விலைக்கு வாங்குவதாக ஒலிபெருக்கி (Loudspeaker) மூலம் அறிவிப்பு செய்தபடி ஒரு நான்கு சக்கர குட்டி யானை வாகனம் மெதுவாக வலம் வந்தது. அந்த வாகனத்தில் வந்த இருவர், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிளைக் கண்டு நபர்கள் முதலில் அக்கம், பக்கம் யாரும் இருக்கிறார்களா ? என்று நோட்டம் விட்ட அந்த நபர்கள், யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவுடன், தங்களது வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கியை தற்காலிகமாக அணைத்தனர். சத்தம் நின்றால் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று மின்னல் வேகத்தில் அந்த சைக்கிளைத் தூக்கி குட்டி யானை வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றிக் கொண்டு அங்கு இருந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது சைக்கிள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்த வீட்டின் கண்காணிப்பு கேமராவை (CCTV) ஆய்வு செய்த போது, பழைய பொருள் வாங்குவது போல் வந்தவர்களே சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில்,
“பழைய பொருள் வாங்க வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என அப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் அலர்ட் கொடுத்து வருகின்றனர்.






