• Sat. Apr 27th, 2024

கதைதான் நடிகனை தீர்மானிக்கும்- ராஜமெளலி

இயக்குனர் ராஜமெளலி RRR படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோருடன் சென்னையில் இரவு 9 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது RRR படம் பற்றியும், கதைகள் எழுதுவது எந்த அடிப்படையில் நடிகர்களை தேர்வு செய்கிறேன் என்பது பற்றியும் விரிவாக பேசினார்

நாம் எவ்வளவு பெரிய ஆளானாலும் படிச்ச ஸ்கூலுக்கு வந்தா பயமா இருக்கும். அது மாதிரி தான் சென்னை எனக்கு, சினிமா கற்று தந்தது சென்னை தான். அந்த பயம் எனக்கு இருக்கிறது. ஒரு பெரிய படம் என்பதை எடுக்கும்போதே யாரும் நிர்ணயிக்க முடியாது.

நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் தந்து படத்தை உருவாக்குகிறோம், இறுதியில் ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ரஜினி சாரை வைத்து படமெடுக்க நீங்கள் சொல்வதில் எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு கதை எழுதி அதில் யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவரை நடிக்க வைக்க வேண்டும், கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாகுபலி எல்லோருக்கும் பிடிக்க காரணம் அதன் மொழி அல்ல, அதன் எமோஷன் தான் அதே போல் RRR பாகுபலியைவிட எமோஷனாலாக ரசிகர்களை ஈர்க்கும். ராம் சரண், என் டி ஆர், ஆலியா பட் எல்லோருக்கும் சமமான திரை அனுபவத்தை தருவது ஒரு படைப்பாளனாக எனக்கு சவாலாகதான் இருந்தது. ஆனால் என் கதை அதை செய்திருக்கிறது. ராம்சரண், என் டி ஆர் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களை கதை எழுதிய கணத்தில் தான் முடிவு செய்தேன்.

இந்த இரு கேரக்டர்களும் வரலாற்றில் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அதுவே கேட்க அதிசயமாக இருந்தது. வரலாற்றில் ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்த நாயகர்கள், உண்மையில் அவர்கள் சந்தித்ததில்லை,

சந்தித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப்படம். போஸ்ட் புரடக்சன் மட்டும் 1 1/2 வருடம் செய்திருக்கிறோம். நான் இந்தப்படத்தை தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் தான் எடுத்திருக்கிறேன். என் சிந்தனை தெலுங்கு அதை மாற்ற முடியாது. ஆனால் தமிழில் நடக்கும் கதையை இயக்கும் போது, இங்கு வந்து கண்டிப்பாக இயக்குவேன். பாகுபலி மாதிரி நினைத்து வராதீர்கள் என்று சொல்லவில்லை ரசிகர்கள் மனதில் இருந்து பாகுபலியை மறக்கடிக்க முடியாது. பாகுபலியில் உள்ள எல்லாம் இதில் இருக்காது ஆனால் அதில் இருந்த எமோஷன் இந்தப்படத்திலும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *