• Sat. Apr 20th, 2024

மீண்டும் சூடுபிடிக்கும் ஒற்றைத்தலைமை விவகாரம்

ByA.Tamilselvan

Jun 15, 2022

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக அவர் தனது ஆதரவாளர்களுடன் இன்றும் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது.
முன்னதாக, 2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். பின்னரே, தேர்தல் ஆணையத்தில் அதை சமர்ப்பிக்க முடியும். இதையொட்டி, அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் மாவட்டச் செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுகவுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வலியுறுத்தி, சென்னையின் முக்கிய இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதும் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *