• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

‘அங்கிள்’ என அழைத்த பெண்ணை சரமாரியாக தாக்கிய கடைக்காரர்..!

Byவிஷா

Dec 28, 2021

கடைக்காரரை அங்கிள் என அழைத்ததற்காக 18 வயது பெண்ணை 35 வயது உடைய ஒரு நபர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவாக தன் குடும்பம் சார்ந்த உறவினர்களையோ அல்லது வெளியில் புதிதாக உள்ள நபர்களையோ சிறுவர்கள், பெரியவர்களை மரியாதை நிமித்தமாக அங்கிள் என அழைப்பது வழக்கம். ஆனால், இளம் வயதிலேயே தன்னை அங்கிள் என பெண் ஒருவர் அழைத்ததால் ஆத்திரமடைந்த 35 வயது நபர் ஒருவர், 18 வயது பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார். பலத்த காயமடைந்த அந்த 18 வயது பெண் ஆக்சிஜன் துணையுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


உத்தரகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் டவுனில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மோகித் குமார் என்ற 35 வயது நபர் காதிமா சாலையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கடையில் கடந்த டிசம்பர் 19ம் தேதி நிஷா அகமது என்ற 18 வயது பெண் பேட்மிண்டன் ராக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு சென்று பார்த்த போது தான் அந்த ராக்கெட்டின் ஸ்டிரிங்குகள் உடைந்திருப்பதை பார்த்திருக்கிறார். எனவே அந்த ராக்கெட்டினை கடையில் மாற்றி வருவதற்காக கடந்த டிசம்பர் 21ம் தேதி மோகித் குமாரின் கடைக்கு சென்றுள்ளார் அந்த 18 வயது பெண்.


ஆனால் கடைக்காரரான மோகித்தை, 18 வயது பெண் அங்கிள் என அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர் மோகித், அப்பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இந்த தாக்குதலில் அப்பெண்ணுக்கு தலையில் பலத்த காயமடைந்து ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். பலத்த காயமடைந்த அந்த 18 வயது பெண் ஆக்சிஜன் ஆதரவுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலீசார் தாமாக முன்வந்து கடைக்காரர் மோகித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் அப்பெண்ணின் தந்தையும் கடைக்காரர் மீது புகார் அளித்திருக்கிறார். கடைக்காரர் மீது 354, 323, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.