• Fri. Apr 19th, 2024

எழுதுகோல் என்னும் கூர்மை

Byவிஷா

Jan 26, 2022
‘அரசன் தாங்கும் செங்கோலை விட, அறிஞன் பிடிக்கும் எழுதுகோல் வலிமையானது’ என்று சொல்வார்கள். முதல் வார்த்தை ஆட்சி உரிமையின் குறியீடாகவும், இரண்டாவது வார்த்தை அறிவுக்கூர்மையின் அடையாளமாகவும் திகழ்கிறது. எழுத்தையும், எழுதுகோலையும் தெய்வமாக மதிப்பவர்களின் எழுத்து, சமுதாயத்தையே மாற்றும் வல்லமை படைத்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த பிச்சினிக்காடு இளங்கோ என்ற கவிஞர் அவர் எழுதிய ஒரு மிகச்சிறிய கவிதையால் எழுதுகோலின் சிறப்பை உணர்த்திப் புதுக்கவிதையில் புதுமை படைத்துள்ளார். தலைப்பு கூட சிறியதுதான். ‘எழுதுகோல்’ என்பதுதான் தலைப்பு. ‘கைநா’ என்பதுதான் கவிதை. இவற்றில் ‘கை’, ‘நா’ என்கிற ஓரெழுத்து ஒரு மொழிகளின் சேர்க்கையால் கையின் நாக்கு போல இருப்பது எழுதுகோல் என்பது நல்ல கற்பனை வளமாக அல்லவா திகழ்கிறது!. என்னே ஒரு விந்தை! எழுதுகோல் என்பது நம் உள்ளத்தின் உணர்ச்சிகளை மௌன மொழியில் பேச வைக்கும் திறமை படைத்தது. 

எழுதுகோலின் மூதாதையராகத் திகழ்ந்தது எழுத்தாணியாகும். எழுத்தாணியும், பனையோலையும் இல்லையென்றால், பண்டைய இலக்கியங்களை நாம் காண முடியுமா? ஓலையின் இடத்தைக் காகிதம் பெற்றுக் கொண்ட போது, எழுத்தாணி விடைபெற்றுக் கொண்டது. அதன்பின்னர், பென்சில், பேனா, ஸ்டீல் பேனா, பவுண்டன் பேனா, பால்பாயின்ட் பேனா என்று ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. 

ஒரு காலத்தில் பேனா வாங்க முடியாமல் தவித்தவர்களும் உண்டு. ஒருமுறை ரசிகமணி டி.கே.சி எழுத்தர் ஒருவரின் தம்பி தேர்வு எழுதுவதற்குப் பேனா இல்லாமல் வருந்துவதைக் கண்டு, தன்னிடம் இருந்த உயர்ந்த பார்க்கர் பேனாவை, அவனிடம் கொடுத்து, “தேர்வு எழுதிவிட்டுத் தந்தால் போதும்” என்றார். 

அவனோ தேர்வை எழுதிவிட்டு வரும்போது பேனாவைத் தொலைத்து விட்டான். அந்த வருத்தத்தில் இருந்த அவன் மறுநாள் தேர்வுக்குப் படிக்காமல் வீட்டிலேயே முடங்கிப் போய் இருந்தான். இதனைக் கேள்வியுற்ற டி.கே.சி, அவனது இல்லத்திற்குச் சென்று ‘பேனா வாங்குவதே தொலைப்பதற்குத்தானே?’ இந்தா, இதை வைத்துத் தேர்வை எழுது’ என்று கூறிவிட்டு, இன்னொரு பார்க்கர் பேனாவைத் தந்து விட்டுப் போன அவரது உள்ளம் எத்தகைய உயர்ந்த பண்பை உடையதாக இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிற போது வியப்பு மேலிடுகிறது. 

இன்றோ பலரிடமும் பேனாவிற்குப் பஞ்சமில்லை, ஆனால், எழுதுவதற்குத்தான் செய்தி இல்லை. 

பால்பாயின்ட் பேனாவை மென்முனை எழுதுகோல், மை உருளை எழுதுகோல், மைக்குழல் எழுதுகோல், பந்துமுனைப் பேனா, உருட்டுமுனைப் பேனா, பந்துமுனை எழுதுகோல், உருள்துளை எழுதுகோல், பந்துமுனைத் தூவி, குமிழ்முனைத் தூவல், பந்துமுனை எழுதி, உருள்குழை எழுதி, குமிழி எழுதுகோல் என்றெல்லாம் பல்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். மேலும் பென்சிலைக் கரிக்கோல் என்றும், பவுண்டன் பென்னைத் தூவல் அல்லது கூர்த்தூவல் என்றும் குறிப்பிடுகின்றனர். 

பேனா என்பது பென் என்பதில் இருந்து பிறந்த தமிழ் வழக்கு. திருவள்ளுவர், ‘எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்’ என்று கண்ணுக்கு மை எழுதும் கருவியையும், கம்பர், ஆதரித்து அமுதில் கோல்தோய்த்து’ என்று ஓவியம் தீட்டும் கருவியையும் கோல் என்று குறிப்பிடுகின்றார். எழுதுவதற்குப் பயன்படும் எல்லாவற்றையும் ‘கோல்’ என்றே குறிப்பிடலாம் என்கின்றனர் தமிழ் அறிஞர் பெருமக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *