எட்டுத்தொகை என்பது கடைச் சங்க காலத்தில் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பின்வரும் எட்டு நூல்களின் தொகுப்பாகும். பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் அறியப்படவில்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன, இவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற ஐந்தும் அகவாழ்வு பற்றிய பாடல்களாகும். காதல் வாழ்வு பற்றிப் பேசுவது அகவாழ்வு (அ) அகப்பொருள் எனப்படும்.
பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் வீரவாழ்வு பற்றியவை. வீரத்தையும், வெளியுலக வாழ்வையும் பற்றிப் பேசுவது புறவாழ்வு (அ) புறப்பொருள் எனப்படும். பரிபாடல் இரண்டு பொருளும் பற்றிய நூலாகும்.
எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து, சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக நற்றிணையில் இருந்து பாடல்களைப் பார்க்கலாம்.
நற்றிணை 1:
பாடல்:
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே’
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி
துறை: தலைவி கூற்று (தலைவனின் பிரிவைத் தலைவிக்குத் தோழி உணர்த்துகையில் தலைவியின் கூற்று இது)
பொருள்:
தோழி! என் காதலர் சொன்ன சொல்லைக் காப்பவர்;. எப்போதும் இனிமையாகப் பழகக் கூடியவர்;. என்றும் என்னைப் பிரியாதவர். குளிர்தாமரையின் தாதுக்களை ஊதி உயர்ந்த மலையிலிருக்கிற சந்தன மரத்தில் வண்டு சேர்த்த தித்தித்தத் தேன் போல உயர்ந்தது அவர் காதல்;. நீர் இல்லாமல் உலகம் இல்லை. அதைப்போல, அவர் இல்லாமல் நானில்லை! விரும்பி நேசிக்கிறார். என் நெற்றியில் படரும் பிரிவுத் துயர் பார்த்துப் பயப்படுவார்! தான் செய்வதை உணராது என்னைப் பிரிந்துச் சிறுமை அடைவாரோ!
இப்பாடலின் உட்பொருள் தலைவன் தன்னைவிட்டுப் பிரிய மாட்டான் என்பதாகும்.