“இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா… பதுக்குற வேலையும் இருக்காது… ஒதுக்குற வேலையும் இருக்காது…என்கிற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் அனைவருக்குமானதாக இருந்தாலும் இன்றைய நாளில் தூத்துக்குடி மாவட்ட அரசியலுக்கு கன கச்சிதமான பொருத்தமாக இருக்கிறது.
தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவருக்கு கட்சி பணிகளிலும், சொந்த விவகாரங்களில் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்து வகையிலும் நிழலாக வலம் வந்தவர் உமரி சங்கர். திமுகவின் மாநில வர்த்தகரணி இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையி்ல் இந்த உமரி சங்கருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் அமைச்சரின் பல ரகசியங்களோடு உமரி சங்கர் பாஜகவில் ஐக்கியமாக இருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன.
இதுகுறித்து தூத்துக்குடி திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

”தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனன்.
அமைச்சரின் வலது கரமாக இருந்து தொழில், அரசியல், கட்சி பொறுப்பு நியமனம், அரசு ஒப்பந்தங்கள், அரசு பணி நியமனம் என ஒட்டுமொத்த கட்சி மற்றும் தொகுதி தொடர்பான பணிகளை கவனித்து வந்தவர் உமரி சங்கர்.
திமுகவின் மாநிலப் பொறுப்பாளர்கள் முதல் ஒன்றிய கிளை நிர்வாகிகள் வரை இவரின் பார்வையை கடந்து தான் அமைச்சரையும் மாவட்ட செயலாளரையும் சந்திக்கும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையி்ல கடந்த மாதம் நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சாட்டை துரைமுருகன் ‘அமைச்சர் அனிதா கிருஷ்ணனிடம் ஒப்பந்ததாரர்களின் பணம் ₹300 கோடி முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன’ என அரசியல்ரீதியான வெடியை கொளுத்திப் போட்டார்.
இத்தகைய சர்ச்சைக்குரிய மேடைப் பேச்சு அனிதா ராதாகிருஷ்ணனின் காது வரை செல்ல விசாரித்ததில் இதன் பின்னணியில் உமரி சங்கர் தான் சாட்டை துரைமுருகனை சந்தித்து விவரங்களை கூறியதாக தெரியவந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து உமரி சங்கரை தன் வீட்டுக்கு அழைத்து கடுமையாக எச்சரித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். பதிலுக்கு உமரி சங்கரும் சற்று உரிமையாகவே அமைச்சரை வறுத்தெடுத்துவிட்டார். கைகலப்பு ஏற்பட்டதாகக் கூட தவல்கள் வருகின்றன.
இந்த விவகாரத்தை திமுக தலைமை வரை கொண்டு சென்ற அமைச்சர் அனிதா, தனது நிழலாக இருந்த உமரி சங்கரை மாநில பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்.
எனது பெயரைச் சொல்லி பலரிடமும் உமரி சங்கர் பணம் வாங்கியிருக்கிறார் என்றும் இதனால் எனது பெயர் கெட்டுவிட்டது என்றும் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார் அமைச்சர் அனிதா.

மேலும் விளாத்திகுளம் பகுதியை சேர்மனிடமும் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலதிபர்களிடம் எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக தலா இருபது லட்சம் வரை சுருட்டியுள்ளதாகவும், திமுக எம்எல்ஏ சண்முகையாவிடம் ரூபாய் 15 லட்சம் வாங்கியதோடு அவருக்கு நெருக்கமான ஒருவரை ஒன்றிய செயலாளராக நியமிக்கிறேன் என பல்வேறு வகையில் பணக் கையாடலை மேற்கொண்டுள்ளதாகவும் அனிதா தலைமைக்கு சொல்லியிருக்கிறார்.
இத்தகைய மோசடி விவகாரம் தூத்துக்குடி எம்பியும் தெண்மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார் அமைச்சர் அனிதா.” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
இந்த சூழலில் தான் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை உமரி சங்கர் நேரில் சந்தித்தாகவும், எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன் இந்தாண்டின் இறுதியில் பாஜகவில் ஐக்கியமாவார் என பரபரப்பாக பேசப்படுகின்றன.
இந்த விவகாரம் குறித்து உமரி சங்கரின் அலைபேசிக்கு நாம் தொடர்ந்து முயற்சித்தும் அவர் போனை எடுக்கவில்லை.













; ?>)
; ?>)
; ?>)