பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரகுபாடி பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி பிரியங்கா அவர்கள், தான் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்ததாகவும் தனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை, எனவே நான் கடந்த ஒரு வருடமாக பள்ளி செல்ல இயலாத நிலையில் இருப்பதாகவும், வேறு பள்ளியில் சேர்க்க உதவிடுமாறும், ஓரிரு நாட்களுக்கு முன்பு வரகுபாடி பகுதிக்கு ஆய்வுக்குச் சென்றிருந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது அந்த மாணவியிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், இடைநிற்றல் இல்லாத நிலையினை உருவாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது, மாணவ மாணவிகளின் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது, உங்களை அரசுப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்கின்றேன் என்றும், உங்கள் வீட்டிற்கு அருகில் எந்த அரசுப்பள்ளி உள்ளது என்றும் கேட்டறிந்தார்.
அப்போது, சிறுவாச்சூர் அரசுப்பள்ளிதான் அருகில் உள்ள பள்ளி என பெற்றோர் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, அந்த மாணவியை சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக அந்த மாணவி சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு சேர்க்கப்பட்டு, அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, இன்று (08.10.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
அப்போது, அந்த மாணவியை தனது அருகில் அமர வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கல்வி ஒன்றுதான் நமக்கான சொத்து, உங்கள் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நான் கேட்டறிந்தேன், உங்கள் உடலுக்கு ஒன்றும் இல்லை, மன தைரியத்துடன் இருங்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள் நன்கு படியுங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என தன்னம்பிக்கையூட்டும் வகையில் மாணவியிடம் கலந்துரையாடினார்.
படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் உடல்நிலையால் தொடர்ந்து படிக்க இயலாமல் இருந்த தன்னை, அரசுப்பள்ளியில் சேர்த்து மீண்டும் படிப்பை தொடர வாய்ப்பளித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவியும், பெற்றோரும் மனமார நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார் உடனிருந்தார்.