• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சீரமைக்கப்பட்ட மசஒரம்பு நீரோடை..,

கோவை மத்வராயபுரத்தில் சிறுதுளி அமைப்பால் டைடன் நிறுவனத்தின் உதவியுடன் சீரமைக்கப்பட்ட மசஒரம்பு நீரோடையின் திறப்பு நிகழ்வு இன்று (ஜூன் 11) வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த திறப்பு நிகழ்வில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப முன்னிலையில், டைடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெங்கடராமன் மலர் தூவி சீரமைக்கப்பட்ட மசஒரம்பு நீரோடையை திறந்து வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வின் போது, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பிற அறங்காவலர்கள் உடனிருந்தனர்.

‘சிறுதுளி’ அமைப்பு, டைட்டன் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசின் அனுமதியை பெற்று, கடந்த ஜனவரி மாதம் மசஒரம்பு நீரோடை புனரமைப்பு திட்டத்தை துவங்கியது. தற்போது 2.5 கோடி ரூபாய் செலவில் மசஒரம்பு நீரோடை தூர்வாரப்பட்டதோடு, ஏழு தடுப்பணைகளும் சீரமைக்கப்பட்டுள்ளது.

மசஒரம்பு நீரோடை திறப்பு விழாவின்போது பேசிய டைடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெங்கடராமன், மசஒரம்பு நீரோடை புனரமைப்பு திட்டத்தில் கலந்து கொண்டது தனது பாக்கியம் என்றும் மசஒரம்பு நீரோடை சீரமைக்கப்பட்டதன் விளைவாக நூற்றுக்கணக்கான விவசாய குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப கூறுகையில், மசஒரம்பு நீரோடை புனரமைப்பு திட்டம் தமிழகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளதாகவும் இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் பெருகும் என்றும் கூறினார்.

சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், மசஒரம்பு நீரோடை புனரமைப்பானது சிறுதுளி அமைப்பின் கனவு என்றும் உரிய அனுமதி பெற்று டைட்டன் நிறுவனத்தின் உதவியுடன் சிதிலமடைந்த தடுப்பணைகளை தற்போது சீரமைத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் வகையில் தயார் செய்துள்ளதாகவும் கூறினார்.