



உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கால்வாயில் குடிநீர் ஆறாக ஓடும் அவல நிலை நீடித்து வருவதாகவும், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளுக்கும், உசிலம்பட்டி நகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம், அனைப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் குடிநீர் ஆறாக ஓடும் நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்றும், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விணாகும் அவல நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், வெயில் காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன் நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

