கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு நிர்வாகிகள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் செல்வது அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலான முடிவு என்றும், அதை குதிரைப் பேரமாக கூற முடியாது என்றும் தெரிவித்தார். பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், அது தொடர்பாக யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை முதலில் விளக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஏதேனும் தவறு நடைபெற்றால் அதுகுறித்து தாங்கள் நிச்சயமாகக் குரல் கொடுப்போம் என்றும், ஆனால் சுய விருப்பத்தின் பேரில் கட்சி மாறுவதை வேறு விதமாக சித்தரிக்கக் கூடாது என்றும் கூறினார்.
மேலும், “விஜய் தலைமையிலான ஆட்சியில் ஊழல், லஞ்சம் இல்லை என்று யாரைக் கேட்டாலும் கூறுவார்கள். இதை சாதாரண மக்களே பேசுகிறார்கள். இதுவே ஒரு புரட்சி,” என்றார்.
சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசிய அவர், “சட்டம்-ஒழுங்கு மோசமடைந்ததாகக் கூற முடியாது. பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கவில்லை; சம்பவங்கள் நடந்த இடங்களில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார்.

மேலும், “50 ஆண்டுகால ஆட்சியை வெறும் 50 நாட்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது தவறான அணுகுமுறை. 2026 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய தீர்ப்பு மிகவும் தெளிவானது. இருப்பினும், திமுக ஏன் எதிர்க்கட்சியாக முழுமையாக செயல்பட தயக்கம், பதற்றம், பயம் காட்டுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது,” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குற்றச்சாட்டுகளால் அல்லாமல், சுய விருப்பத்தின் பேரில்தான் எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்து வருவதாகவும், கடந்த 60 ஆண்டுகால ஆட்சிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்படுவது போன்ற மரியாதை கிடைத்ததில்லை என்றும் தெரிவித்தார்.



