• Thu. Jun 1st, 2023

உடைந்த கண்மாயை ஊர் மக்களே சரி செய்த நிகழ்வு

Byகாயத்ரி

Nov 27, 2021

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உடைந்த கண்மாயை கொட்டும் மழையில் ஊர் மக்களே ஒன்றுகூடி மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர்.


பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட சூடியூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினரிடம் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் சென்ற குழுவினர் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பெயரளவில் பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில் தண்ணீர் கசிவு அதிகமானதால் விரிசல் அதிகமாகி கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டது.


இதைக் கண்ட பொதுமக்கள் கொட்டும் மழையில் மணல் மூட்டைகளை கொண்டு கண்மாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த கண்மாய் நீர் மூலம் சூடியூர், அருள் ஆனந்தபுரம், வடக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றனஇந்நிலையில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறினால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தனர். இந்த தகவலை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் மெத்தனமாக, எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


விரைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் உடனடியாக கண்மாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *