• Sat. Apr 27th, 2024

கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்

Byp Kumar

May 4, 2023

சித்திரைத் திருவிழாவின் 12-ஆம் நாளான இன்று அழகர்கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது விண்ணதிர ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பினர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமாஞ்சோலை அழகர்கோவிலிலிருந்து நேற்று மாலை தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி வழியாக இன்று காலை மூன்று மாவடியை வந்தடைந்தார்.
அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது ‘கோவிந்தா’ எனும் முழக்கம் எழுப்பினர். கோ.புதூரிலுள்ள மாரியம்மன் கோவில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலகாரர் மண்டபம் ஆகிய இடங்களில் எழுந்தருளி இன்று இரவு 9 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை வந்தடைகிறார்.
நாளை அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோவில் அருகேயுள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பிறகு அதிகாலை 5.45 மணியிலிருந்து 6.12 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருள்கிறார். அழகர்கோவிலிலிருந்து மதுரை வண்டியூர் வரை வழிநெடுகிலும் சுமார் 480 மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *