ஓசி பஸ் என இழிவுபடுத்தியவர்களுக்கு மக்கள் சட்டமன்றத்திற்கு உள்ளேயே நுழைய முடியாத வகையில் பாடம் புகட்டியுள்ளனர் என அமைச்சர் சம்பத்குமார் வெற்றி பயணம் திட்டத்தை துவக்கி வைத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மகளிருக்கு பயணச்சீட்டு, இனிப்பு மற்றும் மலர் வழங்கி பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், முதலமைச்சரின் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறும்போது குடும்பமும், சமுதாயமும், நாடும் முன்னேறும் என்ற உயரிய நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கோவை கோட்டத்தில் திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மகளிர் பயன்பெறும் வகையில் மொத்தம் 2,108 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் நகர்ப்புறம், புறநகர் மற்றும் மலைப்பாதைகளில் 790 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் இதன் மூலம் சுமார் 4 லட்சம் பெண்களும் திருநங்கைகளும் பயனடைவார்கள் எனவும் கூறினார்.

கடந்த ஆட்சியில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை “ஓசி பயணம்” எனக் கேலியாகக் கூறி பெண்களை இழிவுபடுத்தியவர்களுக்கு மக்கள் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத அளவுக்குப் பாடம் புகட்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பும் மரியாதையும் வழங்கப்படுவதோடு, இதுபோன்ற அவமதிப்புகள் நடைபெறாத வகையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பேருந்து இயக்கத்தில் சில இடங்களில் நிலவும் நடைமுறைத் தாமதங்கள் மற்றும் அறிவிப்புகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகள் மக்களின் தீர்ப்பின் முன்பாக எடுபடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றியைப் பதிவு செய்வோம் என்று கூறினார்..




