கோவை, சுந்தராபுரம் காந்தி நகரில் வசிக்கும் ரஜினி தெரஸ் பாத்திமா . இவர் தனியார் கல்லூரி உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டு அருகே உள்ள மளிகை கடையில் பால் வாங்குவதற்காக இரவு சுமார் 8.30 மணிக்கு சென்று உள்ளார்.

பாலை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து வரும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் . இவரின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். தாலிக்கொடியை பறிக்கும் போது அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டு அலறினார். அப்பொழுது அக்கம், பக்கத்தினர் அவரை மீட்க முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, இருசக்கர வாகனத்தில் தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்ற பேராசிரியையிடம் தங்கத் தாலிக்கொடி பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.