
மதுரை மாவட்டம்திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரி நீர் பிடிப்பு பகுதியான கண்மாயில் அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் மழை நீர் வெள்ளம் கட்டிட வளாகத்தை சுற்றிவெள்ளமென தேங்கி கல்வி பாதிப்பு ஏற்படுத்துவதுடன், கட்டிடங்களும் மிகுந்த சேதம் அடைந்து 15 ஆண்டு காலமாக இருந்து வரும் நிலையில்,
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, கல்லூரியை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள், ஹோமியோபதி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் இது குறித்து புகார் தெரிவித்து வந்தனர் .

இதனை தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் , தற்காலிகமாக இங்கு பயிலும் மாணவர்களை விருதுநகரில் உள்ள கல்லூரிக்கு மாற்றம் செய்து அங்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார் .இந்நிலையில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ள இடத்தின் அருகே 5.12 ஏக்கர் பரப்பளவில், ரூ 72 கோடி செலவில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை வருவாய் துறை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியதன் பேரில் , இன்று அமைச்சர் சுப்பிரமணியன் அந்த இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்தை சுற்றிலும் ரூபாய் 1.5 கோடி செலவில் வேலி அமைக்க அதற்கான முதற்க்கட்ட பணியை துவக்குவதற்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை ஆட்சியர் சங்கீதா, மதுரை தொகுதி எம்எல்ஏ தளபதி மற்றும் வருவாய் துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர்.

