காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் சித்தம் கலங்கிப் போகிறார். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார்.
அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் கடைசிகாதல்கதை.
அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார்,காதல் காட்சிகள் கோபக்காட்சிகள் ஆகியனவற்றில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.தான் உணர்ந்ததைச் செயல்படுத்தியாக வேண்டுமென்ற வேகத்தில் அவர் செய்யும் செயல்கள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கின்றன.
அறிமுக நடிகை ஈனாக்ஷி கங்குலி,தொடாமல் செய்யும் தூயகாதல் என்று ஒன்றைச் சொல்லி மிரள வைக்கிறார். அதற்கேற்ப நடிக்கவும் செய்திருக்கிறார்.நாயகனின் நண்பர்களாக வரும் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல் ஆகியோர் நன்று.
நாயகனிடம் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் அவஸ்தைகளை நன்றாக வெளிப்படுத்தி இரசிக்கவைக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக வரும் சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா ஆகியோர் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.
சேத்தன் கிருஷ்ணா இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை பொருத்தமாக அமைந்திருக்கிறது.
சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஒரேஇடத்தைப் பல்வேறு விதமாகக் காட்டி ஏமாற்றும் வித்தை அவருக்குக் கை
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ளார்.இது வயது வந்தோருக்கான படம் என்று முடிவு செய்துவிட்டு இறங்கி அடித்திருக்கிறார்.படம் தொடங்கியதிலிருந்து முடியும்வரை இரட்டை அர்த்த வசனங்களால் நிறைந்திருக்கிறது.
காதல் சிக்கலுக்குத் தீர்வு என்று முதலில் ஒன்றைச் சொல்லி சிரிக்க வைத்துவிட்டு கடைசியில் ஈகோதான் எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்று சொல்லிச் சிந்திக்க வைக்கிறார்.