புதுச்சேரி அண்ணா சாலையில் இயங்கும் பிரபலமான பப்பில் கடந்த 14ஆம் தேதி வெளி மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு மது போதை அதிகமாகவே அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததுடன் தட்டிக் கேட்ட ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவன்சர்கள் அந்த கும்பலை எச்சரித்து வெளியே அனுப்பியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பவுன்சர்களை அடிப்பதற்காக பப்பின் வெளியே காத்திருந்துள்ளனர். அப்போது அதே நிறுவனத்திற்கு சொந்தமான வேறு பப்பில் வேலை செய்யும் வினோபா நகரை சேர்ந்த வசந்த் என்ற பவுன்சர், உணவு கொடுப்பதற்காக வந்துள்ளார்.
அதன் பின்னர் தனது பைக்கில் எதிரே உள்ள பெருமாள் கோவில் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் காத்திருந்த கும்பல் அவர் அணிந்திருந்த நிறுவனத்தின் டி-ஷர்ட்டை கண்டதும், தமிழ்நாடு பதிவெண் கொண்ட இன்னோவா காரில் அதிவேகமாக சென்று பைக்கின் பின்னால் இடித்து தள்ளியது. இதில் நிலை தடுமாறி வசந்த் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அந்த கும்பல் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சக பவுன்சர்கள் வசந்த்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.