• Sun. Mar 16th, 2025

குட்டி சிறுத்தையை தாய் சிறுத்தையிடம் சேர்த்த வனத்துறை

ByG. Anbalagan

Feb 14, 2025

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக ஒரு சிறுத்தை நடமாடி வந்ததை அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதி அருகே உள்ளதால் அவ்வப்போது சிறுத்தை நடமாடுவது வாடிக்கையாகி வருவதால் அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் இருந்த சிறுத்தை வியாழன் காலை அன்று இரண்டு குட்டிகளுடன் தேயிலை தோட்டத்திலிருந்து கீழே அமைந்து இருந்த தார் சாலைக்கு குதித்துள்ளது.

உடன்குதித்த ஒரு குட்டி சிறுத்தையுடன் சாலையைக் கடந்து சென்றுள்ளது. மற்றொரு குட்டி மேலிருந்து கீழே குதித்ததில் தடுமாறி தரையில் விழுந்து எங்கும் நகராமல் அங்கிருந்து நீண்ட நேரமாக தாய் சிறுத்தை குட்டி அழைத்துச் செல்லாததால் அருகே இருந்த தேயிலை கொள்முதள் நிலையத்திற்குள் சென்று தஞ்சம் வந்துள்ளது. அடிக்கடி தாயை காண வெளியே வந்த போது அவ்வழியாக சென்ற பொது மக்கள் கண்டு அச்சமடைந்துள்ளனர்.

உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் சோர்வாக இருந்த சிறுத்தை குட்டியை மீட்டு தாய் சிறுத்தை இருக்கும் இடத்திற்கு அருகே சென்று குட்டியை விட்டுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தாய் சிறுத்தையுடன் சேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சிறுத்தை குட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.