• Fri. Apr 19th, 2024

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலைமீது ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்

Byகுமார்

Nov 20, 2021

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலைமேல் தாமிர கொப்பரையில் 300 கிலோ நெய், 100 மீட்டர் அளவு கொண்ட துணி திரி , 5 கிலோ கற்பூரம் கொண்டு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முருகனுக்கு நேற்று முன்தினம் மாலை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.


விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வழக்கமாக தீபத்திருவிழாவின் போது காலையில் பக்தர்கள் வடம் பிடிக்க சிறிய சட்ட தேரோட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக முருகன் – தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால தீபம் ஏற்றப்பட்டு, பின்னர் கோவில் மணி அடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மலைமேல் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் நான்கரை அடி உயரம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக மலைமேல் பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்வையிட்டு பொதுமக்கள் மலை கீழே உள்ள வீதிகளில் நின்றவாறு தரிசனம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக மாலை 6.30 மணிக்கு 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தப்படும்.

கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் ஏற்றவேண்டும் என பல இந்து அமைப்புகள் போராடி வரும் நிலையில் தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *