• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

 ”பொறுக்கிகள்..”

ByS.Ariyanayagam

Oct 15, 2025

பிறந்தநாள் விழா சம்பவத்தால்

சீறும் தங்க தமிழ்ச்செல்வன்

திமுகவில் மீண்டும் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.  மகராஜனுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தனது 64 ஆவது பிறந்த நாளை கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கொண்டாடினார். இதை முன்னிட்டு தேனி, ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் 120க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து பரிமாறினார்.

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிய  தங்க தமிழ்ச்செல்வன்,  தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரொக்க பணம் மற்றும் வேட்டி , சேலை வழங்கியதோடு ஆட்டு இறைச்சி,  கோழி இறைச்சி , முட்டை என கறி விருந்து வைத்தார்.

இதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், தி.மு.க.,வினர் பேனர்கள் வைத்திருந்தனர். அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் படங்களுடன் தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் படமும் இருந்தது. இந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர். இதனால், தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது ஆதரவு தி.மு.க., நிர்வாகி மறவபட்டி மகாராஜன் அளித்த புகாரின் பேரில், ஆண்டிப்பட்டி போலீசார், இது குறித்து விசாரிக்கின்றனர்.

 இதே போல கடந்த  ஆகஸ்டு  2 ஆம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழா  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடந்த இம்முகாமில், திமுக தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி, பெரியகுளம் திமுக எம்எல்ஏக்களான மகாராஜன், சரவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

முகாமின் வரவேற்பு பேனரில் தனது படம் இல்லாததைக் கண்டு கோபத்துடன் மேடைக்கு வந்த தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், தனது படம் இடம் பெறாதது ஏன் என்று ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் கேட்டார். அதே மேடையில் பயனாளிக்கு நிவாரணத் தொகையை யார் வழங்குவது என தங்க தமிழ்ச்செல்வனுக்கும்,மகராஜனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

முட்டாப் பயலே என்று தங்கதமிழ்ச்செல்வன் ஆத்திரத்தில் கேட்க,‘ராஸ்கல்’ என பதிலுக்கு கத்தினார் மகராஜன். மைக்கில் இதை பலருக்கும் கேட்டதால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மைக்கை வாங்கி, அவசர அவசரமாக நன்றி கூறி, நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

இந்த பின்னணியில்தான் தங்கதமிழ்ச்செல்வன் பிறந்தநாள் பேனர்களை எம்.எல்.ஏ. மகராஜன் ஆதரவாளர்கள் கிழித்திருப்பார்களோ என்ற பேச்சு திமுகவினர் மத்தியிலேயே இருக்கிறது.

இதுகுறித்து ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட வைகை சேகர் அரசியல் டுடேவிடம் பேசும்போது,

“ 2002ல் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவன் நான். அப்போதே அதிமுக தரப்பில் எனக்கு 20 கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி அழைத்தனர். நான் மறுத்து விட்டேன். என்னைப் போல விசுவாசிகளுக்கு இப்போது இடமில்லை.  என்னை தற்போது கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்தது போல் பலர் செயல்படுகிறார்கள். நான் 1998ல் ஒன்றிய செயலாளராக இருந்தவன்.திமுகவில் ஒரு தாய் பிள்ளைகளாக நாங்கள் இருந்தோம். இவர்கள் சண்டைகளை பார்க்கும் போது பழைய திமுக தற்போது இல்லை. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலையாகி விட்டது. கட்சிக்குள் மோதல் ,பேனர் கிழிப்பு, மரியாதை குறைவாக பேசிக் கொள்வது ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து திமுகவில் நடந்து வருகின்றன. ” என்று வேதனைப்பட்டார்.

இது குறித்து தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனிடம் அரசியல் டுடே சார்பில்  பேசினோம்.

“என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களை  மதித்து அசைவ உணவு, உடை, பணம் ஆகியவற்றை வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றேன். ஆனால் சில பொறுக்கிகள் எனது பேனரை கிழித்துள்ளனர். ஒரு

எம் .பி .யின் பேனரை கிழித்தவர்களை பொறுக்கி என்று கூறாமல் வேறு எப்படி கூற முடியும். யார் போற்றினாலும் ,யார் தூற்றினாலும் நான் கவலைப்பட போவதில்லை. எனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். எனக்கு தலைவர் ஸ்டாலின் தான். கட்சிக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து உழைப்பேன். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க தயாராக உள்ளே” என்றார் ஆவேசமாக.

இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய திமுகவினர், ”தங்க தமிழ்ச்செல்வன்  எம்பி என்ற முறையில் மக்களுக்கு பணி செய்து வருகிறார். அதை  ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆதரவாளர்கள் தடுத்து வருகின்றனர் அப்படித்தான் அவருடைய பிறந்தநாள் பேனரை கிழித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி என்றால் கட்சி எப்படி மக்களிடம் செல்ல முடியும்? தலைமை இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்றனர்.