சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில், ரோந்து போலீசாரிடம் துணை முதல்வர் உதயநிதியின் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, மெரினா கடற்கரை லூப் சாலையில் ஒருவர் தனது காரை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அங்கு ரோந்து பணிக்கு வந்த போலீசார் காரை நிறுத்தி காரினுள் இருந்த தம்பதியிடம் நீங்கள் யார் எனக் கேட்டு காரை எடுக்க சொல்லி கூறியுள்ளனர் என தெரிகிறது. உடனே அந்த தம்பதி தங்கள் காரை எடுக்க முடியாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசார் அவர்களை வீடியோ எடுக்க ஆரம்பித்தனர்.
உடனே அந்த தம்பதி, “இப்படி எடு , இப்டி எடு.” என போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். பின்னர் பேசிய அந்த நபர், “இப்போவே நான் உதயநிதிய கூப்பிடுவேன் பாக்கறியா.? தேவை இல்லாமல் என்கிட்ட இப்படி கத்த கூடாது. உன்னால முடிஞ்சத பண்ணு., இது மூஞ்ச பாத்தியா .?” எனக் தரைகுறைவாக பேசினார்.
மேலும், “என் ஆக்டிங் டிரைவர் வரும் வரை கார் இப்படி தான் நிக்கும். உன்னால என்ன பண்ண முடியும். நீ வீடியோ எடுக்கிறது டப்பா போன். என்கிட்ட 2 லட்ச ரூபா போன் இருக்கு. முடிஞ்சா அரெஸ்ட் பண்ணுடா. இங்க இருக்குற இன்ஸ்பெக்டர் என்ன பாத்தா வணக்கம் போட்டு போகும். நீ என்ன அரெஸ்ட் பண்ண போறியா.? நாளைக்கு காலைலேயே உன் வீட்டு அட்ரஸ் வாங்கி உன்ன காலி பண்ணிடுவேன்.” என படு மோசமாக சில தகாத வார்த்தைகளை பேசினார். இவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் கணவன் மனைவி இல்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதயநிதி பெயரைச் சொல்லி போலீசாரை மிரட்டிய தம்பதி
