நிலத்தை அபகரிக்கும் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர். பாதிக்கப்பட்ட நபர் பேட்டியளித்துள்ளார்.
சென்னை மாங்காடு பலாண்டீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வரும் சரத்குமார் என்பவர் தனது நிலத்தை அந்த பகுதியை சார்ந்த ரவுடிகள் ஆக்கிரமிக்க இரவு நேரங்களில் குடி போதையில் வந்து கொலை மிரட்டல் விடுத்தும் அத்துமீறி அவரது இடத்திற்கு உள்ளே நுழைந்து மின் கம்பங்களை அறுத்து போடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதாரப்பூர்வமான சிசிடிவி காட்சிகள் முதற் கொண்டு மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கத்திடம் சமர்ப்பித்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன்னை மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் நேற்று இரவு ரவுடிகளால் தாக்கப்பட்ட சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அந்தக் கட்டுடன் மீண்டும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..,
மாங்காடு கிராமத்தில் சர்வே எண் எங்களுக்கு சொந்தமான சொத்து உள்ளது. இந்த சொத்து எங்களது பாட்டி வள்ளியம்மாள் அவர்கள் சுத்த கிரயம் செய்து வாங்கிய சொத்தாகும். இந்த சொத்து எனது தந்தைக்கும் பெரியப்பாவிற்கும் உரியதாகும். எங்கள் பாட்டிக்கு பிறகு அந்த சொத்தை எங்கள் குடும்பத்தினர் அனுபவித்து வருகிறோம்.
இந்த நிலையில் மறைந்த திருநாவுக்கரசு மகன் ராஜேந்திரன் என்பவர் எனது சொத்தை அபகரிக்க முயன்றார். பின்னர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து சொத்து எங்களுக்குரியது என்று தீர்ப்பானது. தற்போது திருநாவுக்கரசு மகன் ராஜேந்திரன் பேரன் பாலாஜி ஆகியோர் எங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அவர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றனர் . இதுகுறித்து ஆன்லைனில் புகார் பதிவு செய்துள்ளேன்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த 20 ஆம் தேதி பாலாஜி அத்துமீறி எங்கள் நிலத்தில் நுழைந்து சேதப்படுத்தியதுடன் என்னையும் தாக்கினார். இதில் காயமடைந்த நான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினேன். எனவே காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.