நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக 18 வது ரோஜாகூட்டம் எனும் பழங்குடி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அய்யப்ப சேவா சங்க அரங்கில் நடைபெற்றது.

என்.எம்.சி.டி.யின் நிறுவனர் நிர்வாக அறங்காவலர் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக ஏ.வி.நிறுவனங்களின் தலைவர் ஏ.வி.வரதராஜன்,நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார்,அய்யப்பன் பூஜா சங்க தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்து கொண்டு மலைவாழ் கிராம பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் ஸ்கூல் பேக்,நோட்டு புத்தகம்,பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார்.
அப்போது பேசிய அவர்,மலைவாழ் பகுதியில் பயின்று வரும் மாணவ,மாணவிகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்க பள்ளி கல்விதுறை கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கரநாராயணன் என்.எம்.சி.டி.பழங்குடியினருக்கான ஒருங்கிணைந்த நிலையான வாழ்வாதாரம் குறித்த பெரிய திட்டத்தை தொடர்ந்து செய்து வருவதாக கூறிய அவர்,அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் மலைவாழ் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் என்.எம்.சி.டி.செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.