காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கே எம் கே மேல்நிலைப் பள்ளியில் பல்துறை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் அனைத்து துறைகளின் சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 650-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் பல்துறை காட்சிப்படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம், கணிதம், வரலாற்றின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனுடன் பிளானிட்டோரியம், மூன் வாக், 3D ஷோ போன்ற சிறப்பு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு, பார்வையாளர்களுக்கு அறிவூட்டலோடு மகிழ்ச்சியையும் அளிக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு, மாணவர்களிடம் அவர்களது படைப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளியின் தாளாளர் மணிமேகலைக்கண்ணையன், பள்ளி தலைவர் மது கண்ணையன், நிர்வாக இயக்குநர் மான்சிகா, கல்வி இயக்குநர் சுருளிநாதன், பள்ளி முதல்வர் கணேசன் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். கடலில் புதைந்த பூம்புகாரை நினைவுபடுத்தும் வகையில் தமிழ் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த “கடலில் புதைந்த பூம்புகார்” காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.




