பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.
பணியாளர்களை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவே இந்நிறுவனம் நியமிக்கிறது. ஆனால் அதில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பாக ஆராய்ந்த பட்டியலின மற்றும் பழங்குடியின நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளைக் கொடுத்திருக்கிறது.
பிரதான பணி வழங்குநர் என்ற அடிப்படையில் பிஎஸ்என்எல் தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறதா, அவர்களின் பணியிட பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறது என பிஎஸ்என்எல் தரப்பில் அரசு பதில் கூறுகிறது. ஆனால் எஸ்.சி./ எஸ்.டி. இட ஒதுக்கீட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்களை பணியமர்த்த வேண்டும் என்று எந்தவித உத்தரவையும் பிறப்பிப்பதில்லை என்றும் சொல்கிறது. இந்தப் பதில் குறித்து நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுக்கு நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையில், “ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி அமர்த்தப்படுவோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் நேர்மையில்லை. அரசு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட வேண்டும். அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நேர்மையாக செயல்படுத்த வேண்டும். அது, நேரடிப் பணி நியமனமாக இருந்தாலும் சரி ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படும் வேலையாக இருந்தாலும் சரி. இட ஒதுக்கீட்டை முறையாக உறுதி செய்ய வேண்டும்.
ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசாங்கம் தொகுப்பூதியம் வழங்குகிறது. அந்தத் தொகுப்பூதியம் பிஎஸ்என்எல் அங்கீகாரத்துடனேயே வழங்கப்படுகிறது. அப்படியென்றால் இந்தப் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதும் பிஎஸ்என்எல்லின் பொறுப்பே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற நிலைக்குழு பாஜக எம்பி கிரித் பிரேம்ஜி பாய் சோலாங்கி தலைமையின் கீழ் செயல்படுகிறது. இதில் மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் பெரும்பான்மையானவர்கள் பாஜக எம்பிக்கள் தான் என்பது கவனித்தக்கது.