தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது, உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், பேரவையில் பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் தேர்பவனி திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 11 பேர் மரணம் அடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ள செய்தி நெஞ்சை நிலைகுலைய வைத்துள்ளது.
அரசு சார்பில் இரங்கலும் நிதி உதவியும் அளித்துள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் கொடிய சம்பவங்களாக உள்ளன. இதன் மீது காவல்துறை அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர் சம்பவங்களாக நடக்காமலிருக்க அரசும் இந்து அறநிலையத்துறையும் மற்றும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர் மக்கள் அனுமதி பெற்றாலும் பெறாமல் இருந்தாலும் காவல்துறை திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று கூறினார்.
சட்டப்பேரவையில் பேசிய, காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, ஆன்மீகத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது. டெல்டா மாவட்டங்களில் இதுபோல் நடக்கிறது. இதற்கு முன்னரும் இதேபோல் பெரிய விபத்துகள் நடந்துள்ளன. மகாமகத்தில் பெரிய விபத்து நடந்துள்ளது. 2014ம் ஆண்டு கும்பகோணம் விபத்தில் குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து இதுபோல் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது தோழியும் கும்பகோணம் மகாமகத்தில் நீராட சென்று போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் கும்பகோணம் பள்ளி தீவிபத்து, மெவுலிவாக்கம் போன்ற விபத்துகள் நடந்தது இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது என்று கூறிய செல்வபெருந்தகை ஆன்மீகத்தை அரசியலாக்ககூடாது என்றும் கூறினார்.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக அரசு செயலிழந்துவிட்டது என்றும், தஞ்சாவூர் கள்ளிமேடு விபத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். கோவில் திருவிழாக்களில் போதுமான பாதுகாப்பை ஏற்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.