தேர்தல் பத்திரங்கள் மூலம் 2023-2024-ம் ஆண்டில் ரூ.1,700 கோடியை பாஜக பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் பெற்ற நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டில் பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.2,360 கோடியாக இருந்தது.
இந்த நிலையில் 2023-2024-ம் நிதியாண்டில் பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.4,340.5 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் ரூ.1,685.6 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளதாக அந்த கட்சியின் ஆண்டு தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் சுமார் 83 சதவீதம் அதிகமாகும்.
இந்த மொத்த நிதியில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 43 சதவீதம் நன்கொடையை பெற்றிருக்கிறது. அதே நேரம் 2022-2023-ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.1,294.14 கோடியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் முந்தைய ஆண்டை விட 61 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் காங்கிரசின் வருமானம் ரூ.452.4 கோடியில் இருந்து 170 சதவீதம் அதிகரித்து ரூ.1,225 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 2022-2023-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக ரூ.268.62 கோடி வந்திருக்கிறது.




