நம்பியவர்கள் கைவிட்டதால் நடுத்தெருவில் இறங்கி போராட வேண்டிய அளவிற்கு போய்விட்டதே எடப்பாடி பழனிசாமி நிலைமை என அதிமுகவினர் ஆதங்கப்பட்டு வருகிறார்களாம்.
தமிழக முதலமைச்சராக இருந்த போது ஒன்றிய அரசுடன் சகல வகையிலும் ஒன்றிப்போய் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வந்தார். தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய போதும், என்ன நடந்தாலும் மத்தியில் நம்ப ஆட்சி தானே பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் இருந்தவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே முன்னாள் அமைச்சர்களின் ரெய்டு பட்டியலை கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதாக செய்தி. முதலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.அதன் பின்னர் சில நாட்களியே முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதனால் மெர்சலான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி விரைந்தனர். அப்போது மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டதால் தான் எஸ்.பி.வேலுமணி கைது நடவடிக்கையில் இருந்து தப்பியதாக தெரிகிறது.
தற்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதில் முக்கிய நபரான சயான் கொடுத்த வாக்குமூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கில் தொடர்புடையதாக எடப்பாடி பழனிசாமியை எப்போது வேண்டுமானாலும் திமுக அரசு கைது செய்யலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரத்திலும் தனக்கு உதவும்படி எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கேட்டுள்ளாராம். ஆனால் அவர்கள் கைவிரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக என்ன செய்வது என்றே தெரியாமல் தான் எடப்பாடி பழனிசாமி கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டாராம். எதுக்கொடுத்தாலும் போராட்டம் நடத்துவது பேஷனாக போச்சு என முதலமைச்சராக இருந்த போது கருத்து சொன்ன எடப்பாடி பழனிசாமியையே தரையில் அமர்ந்து போராட வச்சிட்டாங்களே என தொண்டர்கள் கொதிப்பில் இருக்கிறார்களாம்.