போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதை தடுக்க, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ளும் படி 2017 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்பு கடிதம் அனுப்பபட்டது தொடர்பாக, தாமக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருபாகரன் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு,பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி சைபர் கிரைம் குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில்,பாரதிராஜா என்ற பொறியியல் பட்டதாரி தன்னிடம் பணம் பறிக்க முயற்சித்த போலி நிறுவனத்திற்கு நீதிபதியின் முகவரி மற்றும் மொபைல் எண்ணையும் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும், 80 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சத்து 28 ஆயிரத்து 850 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், இது சம்பந்தமாக சித்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய பிராதப் மற்றும் ராஜ் தலைமறைவாக உள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சித்ரா மீதான வழக்கை தனியாக பிரித்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு பாதிப்பை சாதகமாக பயன்படுத்தி சமீபகாலமாக,போலி வேலை வாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்துள்ளதாகவும், ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலையே ஒருவர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், வேலை வாங்கி தருவதாக கூறி நடைபெறும் மோசடி மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து, இந்த வழக்கை முடித்து வைத்தனர். மேலும்,இந்த மோசடி குறித்த விசாரணையில் சிபிசிஐடி போலீசார் சுணக்கம் காட்டுவதாக தெரிந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தி விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளனர்.