• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எம்பிபிஎஸ் இடத்தை விட்டுக்கொடுத்த ஆசிரியர்!

தனது மகனின் வார்த்தைக்காக, மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றதோடு தனது எம்பிபிஎஸ் இடத்தை மற்றொரு மாணவனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார், நீட் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம்(61).

ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தனது இளமைக்கால கனவான “டாக்டர்” என்பதை நனவாக்க நீட் எழுதி தேர்ச்சி பெற்று இன்று ஒரு மாணவராக கலந்தாய்வு வரை வந்தார் சிவப்பிரகாசம்! அவருக்கு வயது 61.. இந்நிலையில், தற்போது பயிற்சி மருத்துவராக பணியாற்றி கொண்டிருக்கும் தனது மகனின் கோரிக்கையை ஏற்று தனக்கு பதிலாக வேறொரு மாணவருக்கு இந்த நல்வாய்ப்பு கிடைக்கட்டுமே என்று போராடிப் பெற்ற இடத்தை மனமகிழ்ச்சியோடு விட்டுக் கொடுத்துச் சென்றுள்ளார்..

நீட் தேர்வு..
பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை சுக்குநூறாக்கியது! தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வெழுதி எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று இன்று நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 437 இடங்கள் வழங்கப்படுகின்றன. அந்தத் தரவரிசைப் பட்டியலில் கே.சிவப்பிரகாசம் 349-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

இருப்பினும் கலந்தாய்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து இரட்டை மனநிலையில் இருப்பதாக சிவப்பிரகாசம் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயற்சி மருத்துவராக உள்ள எனது மகன், நான் மருத்துவம் படிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனது வயதில் மருத்துவம் படித்து முடித்து அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரைதான் சேவையாற்ற முடியும். நான் கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால் அந்த இடம் ஒரு இளம் அரசுப் பள்ளி மாணவருக்கு கிடைக்கும்.

அதன் மூலம் அவா் 40-50 ஆண்டுகள் வரை மருத்துவ சேவையாற்ற முடியும் என்றார் என் மகன்! எனினும், கலந்தாய்வுக்கு எனது மாணவா் ஒருவருடன் சென்னை வருகிறேன். நான் கலந்தாய்வில் பங்கேற்காமல் இருக்கும்பட்சத்தில், ஒரு இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் வீட்டுக்குச் செல்வேன்.

அதே நேரம், கலந்தாய்வு நடைமுறைகளை அறிந்து கொண்டு, எனது மாணவா்களுக்கு வழிகாட்டுவேன், என்றார்!

பெரிதாய் கனவு காணுங்கள் என்ற அப்துல் கலாமின் வார்த்தைகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார் சிவப்பிரகாசம்.