• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன் அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்…,

ByKalamegam Viswanathan

Oct 12, 2026

மதுரை மாநகர தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன்கள் அமைப்பின் (TPTW) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நேற்று (11.10.2026) மாலை 6.30 மணியளவில் மதுரை ‘Productivity Hall’ அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு டெபுட்டி சீஃப் டிராபிக் வார்டன் திரு. பி.சி. சௌந்தராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, சீஃப் டிராபிக் வார்டன் திரு. டி. தவமணி அவர்கள் கடந்த ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்துச் சமர்ப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் (DC Traffic) திருமதி வனிதா, IPS அவர்கள் தனது பணிச்சுமைக்கு இடையேயும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும், உதவி காவல் ஆணையர்கள் (போக்குவரத்து) திரு. முத்தரசு, திரு. நிக்சன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் போக்குவரத்து வார்டன்களின் சமூகப் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. வார்டன்கள் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்தைச் சீரமைத்தல், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ காலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு தன்னார்வப் பொதுச்சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், சாலைப் பாதுகாப்பு விதிகளை விளக்கியும் பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாராட்டப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கடந்த காலங்களில் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்த போக்குவரத்து வார்டன்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. மதுரை மாநகரத்தைச் சேர்ந்த அனைத்துப் போக்குவரத்து வார்டன்களும் இக்கூட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டனர்.
நிறைவாக, திரு. லட்சுமி நாராயணன் அவர்கள் நன்றியுரை வழங்கிக் கூட்டத்தை இனிதே நிறைவு செய்தார்.