• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 12, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் நீண்ட இடைவெளிகளில் பேருந்துகள் வருவதாலும் பொதுமக்கள் பேருந்து நிறுத்தங்களில் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லாத காரணத்தால் வெயில் மழை நேரத்தில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் பயணிகள் கூறுகின்றனர். தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகள் காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடைகள் இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் வயதானவர்கள் உள்ளிட்டோர் வெயில் மழையில் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகளும் குறிப்பிட்ட இடைவெளியில் வராத காரணத்தால் மதிய நேரங்களில் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் அதேபோன்று இரவு இரண்டு மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதால் தங்களின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அடுத்தடுத்து ஆயுத பூஜை தீபாவளி, கிறிஸ்மஸ் புத்தாண்டு தைப்பொங்கல் என வரிசையாக திருவிழா காலங்கள் வர உள்ளது. மேலும் வட கிழக்கு பருவமழைக்காலமும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் உடனடியாக தற்காலிக நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழவந்தான் திருமங்கலத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனைக்கு தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையாவும் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என சோழவந்தான் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ள சோழவந்தானில் ஒன்றில் கூட நிழற்குடைகள் இல்லாதது வேதனையை ஏற்படுத்துவதாக பயணிகள் பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகையால் சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.