
ஹரியானா மாநிலம் சோனேபாட் நகரின் அருகே உள்ள ஹலால்பூரில் அமைந்துள்ள சுஷில் குமார் குத்துச்சண்டை அகாடமியில் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
அடையாளம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில், உள்ளூர் குத்துச்சண்டை வீராங்கனை நிஷா டஹியா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மரணமடைந்தனர்.
‘நிஷா டஹியா’ எனும் அதே பெயரில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் உள்ளார். அவர் 23-வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இந்த டஹியா தான் பலியானதாக நினைத்து பலரும் இரங்கல் செய்தி தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய குத்துச்சண்டை அமைப்பு சற்று முன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் டஹியா, தான் கோண்டா பகுதியில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
