• Sat. Apr 27th, 2024

முதலமைச்சருக்கு -போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி

ByA.Tamilselvan

Jun 9, 2022

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட  முதலமைச்சருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில். 1990 ஆம் ஆண்டு, ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கான பணிகள் துவங்கியது.  ஜெயங்கொண்டம் மற்றும் 13 கிராமங்களை சேர்ந்த 8,373 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தன. மிகக்குறைவான இழப்பீட்டு தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், 3,500க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் வழக்கு தொடுத்தனர். கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் பதியப்பட்டன. 1999 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த  கலைஞர்  நில உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
அப்போது நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த எனது தந்தையார் மறைந்த சிவசுப்ரமணியன்  தலைமையில் சென்ற நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தது. ஆனால் சில அரசியல் கட்சிகள் போராட்டத்தை அறிவித்த நிலையில், பேச்சு வார்த்தை முன்னேற்றமடையாமல் தேக்கமடைந்தது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
2001 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, இந்த திட்டம் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்கட்சியாக இருந்த போது, போராட்டம் நடத்திய அ.தி.மு.க , ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை. 2006 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்  தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. அன்றைய ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் சட்டப்பேரவையில் இத்திட்டம் குறித்து உரையாற்றினேன். அன்றைய பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்றிய அரசில் அமைச்சராகவும் இருந்த ராசா  தலைவர் கலைஞர் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றார்.
அன்றைய மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீரசாமி பெரம்பலூர் வருகை தந்து, விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்டார். முதல்வர் கவனத்திற்கு அவற்றை கொண்டு சென்றார். ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டம் குறித்த 10,000 வழக்குகளை விசாரிக்க இரண்டு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுத்தார் அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் இழப்பீட்டு தொகையை நீதிமன்றங்கள் நிர்ணயிப்பதை ஏற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதியளித்தார். நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று ஏக்கருக்கு ரூ 15 லட்சம் அளவில் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. ஒன்றிய அமைச்சராக இருந்த ஆ.ராசா ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூலம் துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க ஆட்சி அமைந்தது. நீதிமன்றம் நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகையை எதிர்த்து அ.தி.மு.க அரசு மேல்முறையீட்டுக்கு சென்றது. நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் அ.தி.மு.க அரசின் ஆர்வமின்மையால், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட செயலாக்கத்தில் இருந்து பின் வாங்கியது.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்காக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை. மக்களின் நன்மை குறித்து அக்கறையற்று இருந்தது. அதனால் மக்கள் இழப்பீடும் கிடைக்காமல், நிலத்திற்கும் உரிமையில்லாமல் தவிக்கும் நிலை நீடித்தது.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரியலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வந்த கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜெயங்கொண்டம் அருகே உரையாற்றும் போது, “தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் செயல்படுத்தப்படும் அல்லது நிலம் உரிமையாளர்கள் வசம் திரும்ப வழங்கப்படும்”, என்று உறுதியளித்தார்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து ஒரு வருடத்தில், சொன்னதை செய்து காட்டி இருக்கிறார் முதலமைச்சர் .  எந்த கட்சியும் போராட்டம் நடத்தாமல், கோரிக்கை வைக்காமல் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் முதலமைச்சர்.

நிலத்தை திரும்பக் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், அதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்ப வழங்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் . வரலாற்றில் இல்லாத சாதனையாகும் இது.

25 ஆண்டு காலப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது. நிலத்திற்கான உரிய இழப்பீடு கிடைக்காமல், நிலமும் திரும்ப கிடைக்குமா என தவித்து வந்த விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் தமிழக முதல்வர் . மறுவாழ்வு கிடைத்தது போல் உணர்கிறார்கள் நில உரிமையாளர்கள். பாதிக்கப்பட்ட 3,500 குடும்பத்தில் ஒருவன் என்ற முறையிலும், இந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவன் என்ற முறையிலும் ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் சார்பாக இரு கரம் கொண்டு வணங்கி நன்றி கூறுகிறேன். என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *